கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

கல்விதான் நம் எல்லாரையும் எல்லா வகையிலும் வளர்வதற்கு வாய்ப்பைத் தருகிறது. அந்தக் கல்வியைப் பற்றித் திருவள்ளுவர் கூறுகிறார்,

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தோழாஅர் எனின்

என்றார்.

கல்வி கற்பதன் பயன் கடவுளைத் தொழுவது, அவரது திருவடிகளைத் தொழுவது. ஆகவே பக்தியோடு பிறந்து, பக்தியான  விஷயங்களோடு தொடர்பு கொண்டு வாழ்வதே மனித வாழ்விலே முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இளம் வயது முதற்கொண்டே கல்வியைக் கற்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 

கல்வி என்பதிலே 'கல்' 'வி' என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. 'கல்' என்றால் கற்றுக்கொள் என்று அர்த்தம். 'வி' எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? வெற்றி தருவதை, கற்றுக்கொள்ள வேண்டும். 

வாழ்க்கையில் பெறும் கல்வி மட்டும் இருந்தால் போதாது. அடுத்தடுத்த வகுப்புக்கு நாம் செல்வது போல், நம்முடைய வயது ஏறிக்கொண்டே போவதுபோல், பணிவும், பக்தியும் பண்புகளும் வளர்ந்து கொண்டே போகவேண்டும் - வகுப்பு ஏற ஏறப் பாடங்களும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா, பள்ளி மாணவர்கள் எல்லாம் படிக்கும்போது படிப்பிலே கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும் ? அர்ஜுனன் போல !! சரித்திர வாழ்க்கை கதையான ராமாயணம், மகாபாரதம் கதைகள் உங்கள் தாத்தா பாட்டி பெற்றோரிடம் இருந்து தெரிந்து கொண்டீர்கள்  அல்லவா ?  

பஞ்ச பாண்டவர்கள் என்று ஐந்து பேர் இருந்தார்கள். கௌரவர்கள் என்று நூறு பேர் இருந்தார்கள். நூற்றி ஐந்து பேருக்கும் ஒரு வகுப்பறை. வில் வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் துரோணாச்சார் தான் ஆசிரியர். நூற்றைந்து பேர்களுக்கும் வில் வித்தை கற்றுக்கொடுத்தார். எல்லோரும் நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டார்கள். படிப்புக்காலம் முடிந்தது. பரீட்சை நேரம் வந்தது. பரீட்சை என்றால் பேனா, தாள் எல்லாம் வைத்து எழுதுகின்ற பரீட்சை அல்ல.

ஒரு மரத்தில் இலக்கை வைத்து அம்பு எய்யும் பரீட்சை வைக்கிறார் துரோணாச்சார். "அன்பார்ந்த மாணவர்களே.. இந்த மரத்தின் மேலே என்ன இருக்கிறது?" என்று ஒவ்வொருவரையாகக் கேட்கிறார்.

ஒவ்வொரு மாணவனும் சொல்கிறான், "ஆசிரியர் இத்தனை காலமும் நமக்கு எத்தனையோ சொல்லிக் கொடுத்தார். ஆனால் இந்த மரத்தின்மேல் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியலையே? நல்ல மாங்காய் தொங்குதே" என்றான்.

அர்ஜூனனுடைய முறை வந்தது. அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் சொன்னான்.

"மாமரம் இருக்கிறது. மாங்காய் இருக்கிறது. மாவடு இருக்கிறது. மாம்பூ இருக்கிறது. மாவிலை இருக்கிறது. அத்தனைக்கும் மேலே அழகான பச்சை நிறமுடைய கிளி  ஒன்று உட்கார்ந்திருக்கிறது" என்று சொன்னான்.

"எப்படி உனக்கு மாத்திரம் தெரிகிறது.?" என்று வியப்புடன் கேட்டார் ஆசிரியர்.

"உங்கள் கேள்வியிலிருந்தே தெரிந்து கொண்டேன். சாதாரணமாய் எல்லோருக்கும் தெரிந்ததை யாராவது ஆசிரியர் கேட்பாரா? என்ற யோசனை செய்து பார்த்தேன். என் மூளை வேலை செய்தது. மாமரத்தில் எல்லாமும் இருக்கும் நிறத்திலேயே கிளியும் இருப்பதால் மிகவும் கூர்ந்து கவனித்த பிறகுதான் அது இருப்பது தெரிந்தது" என்றான்.

இது ஒரு கதை. இந்தக் கதையிலிருந்து மாணவச் செல்வங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், என்ன மாதிரிக் கல்வி இருக்கிறதோ நம் கல்விக்கூடத்திலே, அதற்கேற்ற மாதிரி ஆலோசித்துத் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். கேட்டவுடனேயே பதிலைப் படபடவென்று சொல்லிவிடக் கூடாது. கேள்வியை உற்று நோக்கி, சரியான விடைதான் என்று பரிசீலித்து பதிலை எழுத வேண்டும். அப்படி நன்கு ஆலோசித்து பதிலைச் சொன்னால் நாம் எல்லா வகைகளிலும் வெற்றிக்கு வழிவகை வகுத்தவர்கள் ஆவோம். ஆகவே படிக்கும் பொழுதும் பரீட்சை எழுதும் பொழுதும் மாணவ மாணவிகள் நிதானமாக ஆலோசித்து சரியான விடையைக் கண்டு பிடித்துப் பதில் எழுத வேண்டும் என்பதற்கு இந்தக் கதை ஒரு நல்ல உதாரணம்.

Popular posts from this blog

Term 3 Unit 1 Prose: Journey by Train