படிப்பதற்கு தேவையான உஷாரான சுறுசுறுப்பான திறமையான முறைகள்

1.  நாற்பது  நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து படிக்க வேண்டாம். மூன்று மணி நேரம் நீங்கள் தேர்வுக்காக படிக்க வேண்டும் என்றால், 40 நிமிடம் படிப்பு + 10 நிமிடம் ஓய்வு (நடந்து செல்வது, பேசுவது, வேடிக்கை பார்ப்பது போன்றவைத்தான் ஓய்வு.  அப்போது டிவி மொபைல் பார்ப்பது கூடாது). இவ்வாறு மாறி மாறி மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேலோ  படிக்கலாம். 

2. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே படிக்க வேண்டும். கண்ட நேரத்தில் மாறி மாறி வெவ்வேறு நேரத்தில் படிக்க வேண்டாம். 

3. அதற்காக, தினமும் எந்த நேரம் படிக்க சிறந்தது, வீட்டில் எப்போது  தொந்திரவு அல்லது வேலை இல்லாமல் இருக்கும், எல்லா நாளும் ஒரே போல இருக்குமா, அல்லது ஒவ்வொரு கிழமையிலும் வெவ்வேறு நேரம் ஒதுக்க வேண்டுமா என சிந்தித்து திட்டம் வகுக்க வேண்டும். அதன் படி தினமும் படிக்க வேண்டும். மாற்றம் கூடாது. 

4. என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என படிக்கும் முன்பு யோசனை செய்ய வேண்டும். அதாவது மனப்பாடம் செய்வதா, ஹோம் வொர்க் எழுதுவதா, ஆழ்ந்து புரியும்படி படிப்பதா , அல்லது ஏதாவது பயிற்சி செய்வதா என திட்டமிட்டு படிக்க ஆரம்பிக்க வேண்டும். 

5. குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வம் குறைவாக இருப்பது, புரியாமல் இருப்பது, கஷ்டம் என நினைப்பது போன்ற காரணங்களால், படிக்க ஆரம்பித்த பாடத்தை படிக்காமல் விடுவதோ அல்லது பிறகு பார்க்கலாம் என தள்ளி போடுவதோ கூடாது. நேரத்தையோ பாடத்தையோ தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப் போடுவதால், எதிர்பாராத ஆபத்துகள் வந்து விடும். 

6. முதலில் படிக்க ஆரம்பிப்பது கடினமான பாடமாக அல்லது பயிற்சியாக இருக்க வேண்டும். சுலபமான எளிதான பாடத்தை முதலில் தேர்வு செய்தால், கடினமான பாடம் வரும்போது மூளை களைப்பு அடைந்திருக்கும், அதனால் ஆர்வம் போய்விடும். கடினமான பாடம் புரியவே புரியாது. 

7. புத்தகம் படிக்க / பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன்பு ஏற்கனவே நீங்கள் பள்ளியில் கையால் எழுதிய நோட்ஸ்-களை எடுத்துப் பார்த்தால் அதை எழுதும்போது நீங்கள் பள்ளியில் கவனித்தவை சொன்னவை ஆகியன நினைவுக்கு வரும். இதை தொடர்ந்து புத்தகம் படிப்பது பயிற்சி செய்வது ஆகியன அதிக பலன் (மார்க்) கொடுக்கும். 

8. படிக்க ஆரம்பிக்கு முன் சரியான இடத்தில் அமர வேண்டும். சத்தம் குறைவாக இருக்க வேண்டும். கண் எதிரே நிறைய காட்சிகள்,  நடமாட்டம் இருக்க கூடாது. பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பது கூடாது. அது உங்கள் சிந்திக்கும் திறனை பாதிக்கும். படிக்கும் போது சிந்திக்க வேண்டும். ஆகவே உங்கள் மூளைக்கு கண் மற்றும் கைவிரல் மட்டுமே தொடர்பு இருக்க வேண்டும். 

9. வீட்டின் அருகே உங்கள் வகுப்பு நண்பன் இருந்தால், அவரிடம் நீங்கள் படித்ததை அவருக்கு ஆசிரியர் போல சொல்லலாம். பதிலுக்கு அவரும் உங்களுக்கு ஒரு பாடத்தைப் பற்றி சொல்லலாம். நீங்கள் படித்ததை மற்றவரிடம் சொல்வதால் பாடம் எளிதில் மறக்காது. 

10. வாரம் ஒரு நாள், அந்த வாரம் முழுக்க என்ன பாடங்கள் நடத்தினார்கள், என்ன பயிற்சி செய்தோம், என ஒருமுறை விவரமாக அதை எடுத்து பார்ப்பது , ரிவிஷன் செய்வது சிறந்தது. 


மேற்கண்ட பத்து படிப்பு முறைகளை நீங்கள் பழகினால் படிப்பில் சிறந்து விளங்குவதும்  உயர் கல்வி படிப்பதும் எளிது. 

வழங்கியவர் : சரவணன், gseva.org, இ-வித்யாலோகா. 877 808 3817 

Popular posts from this blog

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

Term 3 Unit 1 Prose: Journey by Train